Skip to main content

டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இலங்கை - ஜப்பான் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

MoT Editor

டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் (பொறியியலாளர்) இரங்க வீரரத்ன அவர்களுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் திரு. ஹாரா ஷோஹெய் (Mr. Hara Shohei) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (14) டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் GovTech தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் JICA இலங்கையின் தலைமைப் பிரதிநிதி திரு. ஷிகேகி ஹோன்சு (Mr. Shigeki Honzu) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டு முன்னுரிமைப் பிரிவுகளின் கீழ் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அதன் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை கௌரவ பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், உள்நாட்டுத் தொழில்துறையை மேம்படுத்துவதையும் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் சிக்னல்களைப் பெறுவதற்குத் தேவையான Set-Top Box-களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கூடுதலாக, இலங்கையின் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தேசிய AI தரவு மையம் (National AI Data Centre) ஒன்றை அமைப்பது குறித்தும் இருதரப்பினருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டது. இதற்கு இணையாக திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயிற்சிகள், இலங்கைக்கு ஏற்ற AI தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

JICA அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப உதவியைப் பாராட்டிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி இத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

image 01image 02image 03image 05image 04image 06