இலங்கையின் டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பைப் புதுப்பித்து, மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களுக்கான (Virtual Asset Service Providers - VASPs) முறையான மற்றும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5வது துணைக் குழுக்கூட்டம் கௌரவ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் இன்று (10) இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சர்வதேச தரத்திற்கு அமைவாக இலங்கையில் VASP துறையைக் கண்காணித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்க அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மீது இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன் ஒரு முக்கிய அம்சமாக, மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (Financial Action Task Force - FATF) சர்வதேச தரநிலைகள் குறித்த சிறப்பு தொழில்நுட்ப உதவி அமர்வும் நடத்தப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் HM Treasury நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த கிளேர் வில்சன் மற்றும் ஹாலா நஜ்ஜார் ஆகியோரால் மெகாளிக்கப்பட்ட இந்த அமர்வில், உலகளாவிய VASP ஒழுங்குமுறை அனுபவங்கள், FATF இன் முக்கிய ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகள் மற்றும் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான சட்ட மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை தயாரிப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகள் குறித்து விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான (AML/CFT) பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி, இலங்கையின் VASP ஒழுங்குமுறை கட்டமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்க்கமான அடியாக இந்த கலந்துரையாடலைக் குறிப்பிடலாம். தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் நிதித் தரநிலைகளுடன் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சுபானி கீர்த்திரத்ன உள்ளிட்ட அரசு மற்றும் நிதித் துறையின் முக்கிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




