டிஜிட்டல் சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாத்தல் மற்றும் ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு (Scams and Fraud) தீர்வுகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்ட விசேட இராஜதந்திர கலந்துரையாடல் ஒன்று 2026 ஜூன் 25 அன்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கெரி ஹோட்டல் (Kerry Hotel) வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. GSMA அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல், "MWC Shanghai 2026" சர்வதேச மாநாட்டுக்கு இணையாக, அழைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒரு மூடிய அமர்வாக (Closed-door) நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் கலந்துகொண்டதுடன், பிராந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் தீவிர பங்களிப்பு அங்கு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது.
ஆசிய-பசிபிக் மற்றும் ஆசிய (ASEAN) பிராந்திய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு, டிஜிட்டல் சேவைகள் மற்றும் பொருளாதார மீளெழுச்சித் திறனைப் பாதிக்கும் எல்லை கடந்த (Cross-border) மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக கொள்கை வகுப்பாளர்களும் ஒழுங்குபடுத்துபவர்களும் எவ்வாறு கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கிமயமாக்கல் (Automation) ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நவீன அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அதற்குப் பொருத்தமான டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கொள்கை ரீதியான கருவிகளை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன் இரண்டாவது கலந்துரையாடல் சுற்று "Building a Secure and Resilient Digital Future: AI, Automation and the Next Frontier of Anti-Scam Defence" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த இலங்கை பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழு வல்லுநர்கள், மோசடி எதிர்ப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், இதற்காக தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை மேலாண்மை செய்து அதன் நன்மைகளை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். மேலும், நாடுகளுக்கு இடையே உள்ள சட்ட அதிகாரங்கள் மற்றும் அமலாக்க மாதிரிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட போதிலும், பொதுவான கோட்பாடுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் இந்த அமர்வில் வலியுறுத்தப்பட்டது.
GSMA அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்திய பொதுக் கொள்கை மற்றும் பொது விவகாரத் தலைவர் திருமதி ஜெனட் வைட் (Jeanette Whyte) அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடலில், இலங்கை විදුலிசமிக்ஞை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வுபெற்ற) அவர்கள், பிராந்திய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்தின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சர் கௌரவ சாய்ச்சனோக் சித்சோப் (Chaichanok Chidchob) அவர்கள், மாலைதீவு தகவல் தொடர்பு அதிகாரசபையின் தலைமை நிர்வாக அதிகாரி இல்யாஸ் அகமது (Ilyas Ahmed) அவர்கள், மலேசிய தகவல் தொடர்பு அமைச்சின் பிரதி பொதுச்செயலாளர் மனோ வீரபத்திரன் (Mano Verabathran) அவர்கள் மற்றும் சீன சைபர் பாதுகாப்பு சங்கத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லு வெய் (LU Wei) அவர்கள் உட்பட இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.





