சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு (WAIC) இணையாக நடைபெற்ற இராஜதந்திர மட்டத்திலான மாநாட்டில் உரையாற்றிய இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்கா வீரரத்ன அவர்கள் சிறப்புரை ஆற்றினார். "பிரகாசமான எதிர்காலத்திற்கான AI கூட்டாண்மை" (AI Partnership for a Brighter Future) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் டிஜிட்டல் அமைச்சர்கள் மற்றும் இத்துறை சார்ந்த முன்னணி வல்லுநர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தங்கள் நாடுகளில் தற்போதுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்தும், சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் பொதுச் சேவைகளையும் பொருளாதாரங்களையும் தீர்மானித்து வருவதால், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை கட்டமைப்பை உருவாக்கும் போது வளரும் நாடுகளின் குரலுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இன்று நம் முன்னால் உள்ள உண்மையான கேள்வி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்தை மாற்றுமா என்பது அல்ல, மாறாக அந்த மாற்றத்தின் பலன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சென்றடைகிறதா அல்லது அது சட்டங்களை உருவாக்கும் நாடுகளுக்கும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டு வாழும் நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறதா என்பதே ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார்
இதற்கான இலங்கையின் பதில் மிகவும் எளிமையானது என்றும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகையானது வளரும் நாடுகளை (Global South) இந்த மேசையைச் சுற்றி அமர வைத்து உருவாக்கப்பட வேண்டுமே தவிர, முடிவுகளை எடுத்த பின்னர் அவர்களுக்குத் தெரிவிப்பதாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது அதன் ஆளுகைச் சட்டங்களை கூட்டுப் பொறுப்புடன் இணைந்து எழுதுவதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான கூட்டாண்மையாக மாற முடியும் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்காக இலங்கை கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் DIGIECON 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார திட்டத்தின் ஊடாக வலுவான டிஜிட்டல் அடித்தளத்தையும், இறையாண்மைமிக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கான அடிப்படையான இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள (SLUDI) தளம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்றும், விரைவில் நிறுவப்படவுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் (National AI Institute) ஊடாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் குறித்த உள்நாட்டு திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை முயற்சிக்கான இலங்கையின் அணுகுமுறையை வழிநடத்தும் ஒரு முக்கிய கொள்கையாக, உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் இணையும் அதே வேளையில், நாடுகள் தங்களது சொந்த தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஆளுகை செய்யும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இது தவிர, செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த உலகளாவிய விதிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், வளரும் நாடுகளுக்கு அவற்றை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன் எந்தவொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பினதும் இறுதி வெற்றியானது, அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மட்டும் அளவிடப்படக் கூடாது என்றும், அது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைக் கொண்டே அளவிடப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க அவர்களுடன் பிராந்திய நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.





