இலங்கையின் தொழில்முனைவோர் துறையில் புதியதொரு ஆரம்பம் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை (SMEs) உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "SME Nexus" 2026 தேசிய மூலோபாயக் கட்டமைப்பு, கடந்த மே 13ஆம் திகதி கொழும்பு The Grand Maitland ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாட்டின் மொத்தப் பதிவுசெய்யப்பட்ட வணிகங்களில் 75% க்கும் அதிகமானவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52% பங்களிப்பை வழங்கும் இத்துறை எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான தடைகளை நீக்கி, அவர்களை உண்மையான பொருளாதாரப் பங்காளிகளாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" (A Thriving Nation – A Beautiful Life) என்ற அரச தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூலோபாயக் கட்டமைப்பு 11 தூண்களின் அடிப்படையில் செயல்படுகிறது. இதில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வலுவூட்டலின் கீழ் ஒருங்கிணைந்த SME தரவு அமைப்பு மற்றும் டிஜிட்டல் வணிகக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 'ஒற்றைச் சாளர' (Single-window) சேவை மையங்கள் மற்றும் 'SME Connect' அழைப்பு மையம் ஊடாக தொழில்முனைவோருக்குத் தேவையான சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகப் பதிவு நடைமுறைகளை எளிதாக்குதல், நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 'வளர்ச்சி நிதியம்' (Growth Fund) ஒன்றை நிறுவுதல் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (Global Value Chains) இணைப்பது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தேசியத் திட்டத்தின் ஊடாக, பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி தொழில்முனைவோருக்கு நேரடி வழிகாட்டல்களை வழங்கும் 'உறவு அதிகாரிகள்' (Relationship Officers) நியமிக்கப்படவுள்ளதுடன், இலவச ஆலோசனச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் தொழில்முனைவோர் கலாசாரத்தை ஊக்குவிப்பதோடு, வணிக புலனாய்வு ஆராய்ச்சி (SIBA) பிரிவின் மூலம் தரவு அடிப்படையிலான தீர்மானங்களை எடுப்பதன் ஊடாக இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரவும் இந்த வேலைத்திட்டம் எதிர்பார்க்கிறது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கௌரவ தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.





