அரச சேவையில் "நேர்மையான கலாச்சாரம் மற்றும் தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய திட்டத்திற்கு தீவிர பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஊழியர்கள், அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால அவர்களின் தலைமையில் நேர்மையான அரச சேவைக்கான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வு இன்று (27) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கருப்பொருளான "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற இலக்கை அடையும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பிரசார வாரத்திற்கு இணையாக இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர், டிஜிட்டல் ஆளுகையை (Digital Governance) நோக்கிய பயணத்தில் அதிகாரிகளின் மனப்பான்மை மற்றும் நடத்தை மாற்றங்கள் மிகவும் முக்கியம் என்றும், நேர்மையையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து மக்களுக்கு திறமையான மற்றும் நம்பிக்கையான சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஒட்டுமொத்த அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் உயர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அதிகபட்ச திறமையைக் கொண்ட மக்கள் நலன்சார் அரச சேவையை கட்டியெழுப்புவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.




