இலங்கையின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மாற்றத்திற்கான பயணத்தை விரைவுபடுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும் ஆசியா பசிபிக் பிராந்தியத்திற்கான UNDP பணிப்பாளருமான செல்வி கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைகான வசாதி பிரதிநிதி செல்வி அஸூஸா குபோட்டா உட்பட பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure - DPI) அபிவிருத்தி மற்றும் சர்வதேச நிதிய நிறுவனங்களின் (IFI) நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் ஊடாகக் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பிரதான கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் UNDP மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO Sri Lanka) இணைந்து செயற்படுத்தும் 'OneRegistry' திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், ஐக்கிய நாடுகளின் பிரதான செயற்பாட்டு முகவர் அமைப்பாக UNDP இன் பூரண ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதாக செல்வி கன்னி விக்னராஜா இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார். தற்போதுள்ள டிஜிட்டல் வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி, ஐக்கிய நாடுகளின் டிஜிட்டல் மாற்றத்திற்கான சட்டகத்தின் கீழ் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


