'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சரியாக அடையாளம் காண்பது மற்றும் அந்தப் பட்டியலிடல் செயல்முறையை மிகவும் வேகமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த 28 ஆம் திகதி நிதி அமைச்சில் நடைபெற்றது. தற்போதுள்ள நலன்புரி பொறிமுறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இங்கு முக்கியமாக, பயனாளிகளை அடையாளம் காணும் தற்போதைய முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தக்கூடிய விதம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இச்செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தரவுகளைச் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதில் உள்ள துல்லியத்தன்மையை அதிகரிக்க முடியும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கமைய, சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற நீண்டகாலத் தீர்வுகள் மற்றும் முறைமைகளை மேம்படுத்துதல் போன்ற உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தவிர, கள மட்டத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வெற்றிடங்களை நிரப்புதல், கிராம உத்தியோகத்தர்களை அஸ்வெசும செயல்முறையில் தீவிரமாகப் பங்கெடுக்கச் செய்தல் மற்றும் கொடுப்பனவு முறைகளில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டன. அரச இயந்திரத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், உண்மையாகவே உதவி தேவைப்படும் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே இதன் பிரதான எதிர்பார்ப்பாகும்.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரினாயக்க உள்ளிட்ட நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


