Skip to main content

இலங்கை மற்றும் வியட்நாம் இடையே டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்பு பலப்படுத்தப்படுகிறது

MoT Editor

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி கௌரவ தோ லாம் (Tô Lâm) அவர்களின் இலங்கை விஜயத்திற்கு இணையாக, இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் வியட்நாமின் 57 வது செயல்பாட்டுக் குழுவின் தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. நுயென் தி ட்ரூங் (Nguyen The Trung) ஆகியோருக்கிடையில் இன்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பணமில்லா கொடுப்பனவு அமைப்புகள், சைபர் பாதுகாப்பு, தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் போன்ற முக்கிய துறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை 15 பில்லியன் அமெரிக்க டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தையும், 5 பில்லியன் அமெரிக்க டாலர் டிஜிட்டல் ஏற்றுமதி இலக்கையும் அடைந்து, பிராந்திய டிஜிட்டல் மையமாக மாறுவதற்கான தேசிய நோக்கு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் தரவு மையத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளுக்கு வியட்நாமின் ஒத்துழைப்பை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள தொழில்துறை மட்டத்திலான உறவுகளைப் பாராட்டிய தூதுக்குழுவினர், இலங்கையின் SLASSCOM நிறுவனம் மற்றும் வியட்நாமின் VINASA சங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, வியட்நாமின் ஹனோய் (Hanoi) நகரை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வியட்நாம் தூதுக்குழுவினர் டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவாக்கம், அரச துறையை டிஜிட்டல் மயமாக்கல், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் AI திறன் மேம்பாடு ஆகியவற்றில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இரு நாடுகளினதும் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை வலுப்படுத்த தொடர்ச்சியான அறிவுப் பரிமாற்றம் மற்றும் நடைமுறை பங்களிப்பு அவசியம் என்பது இரு தரப்பினராலும் அவதானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வியட்நாமிய தூதுக்குழுவினருடன், இலங்கை தரப்பிலிருந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06