இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட 26 ஆவது ஏற்றுமதியாளர்களின் தேசிய மாநாடு (Exporters' Forum) இன்று (19) கொழும்பு NDB-EDB கோபுர வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் இரங்க வீரரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.
தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு அரச துறையின் தலையீட்டின் மூலம் தீர்வுகளை வழங்குவதையே ஏற்றுமதியாளர்களின் தேசிய மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு ஏற்றுமதியாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அரச நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி சமூகத்திற்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கும், கொள்கை ரீதியான மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஏற்றுமதியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பை மேலும் நெருக்கமாகப் பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை பதிவிடவும், தீர்க்கப்பட்ட விவரங்களை சரிபார்க்கவும், அத்துடன் இதுவரை தீர்க்கப்படாத சவால்களை அடையாளம் காணவும் பிரத்யேக டிஜிட்டல் தளமொன்றை (Dedicated Portal) நிறுவுவதற்கு அவர் யோசனை முன்வைத்தார். மேலும், இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் கண்டறியப்படும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அவ்வப்போது இவ்வாறான மாநாடுகளை கூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதித் துறையின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியான "ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027" (Sri Lanka Expo 2027) கண்காட்சி எதிர்வரும் 2027 ஜனவரி 14 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் பெருங்கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உட்பட பல்வேறு அமைச்சுக்கள், அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் தீவின் முன்னணி ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.





