உலகளாவிய இளம் தொழில்முனைவோர் இயக்கத்தில் இலங்கையின் அடையாளத்தைப் பதிக்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட "Hult Prize Sri Lanka Nationals 2025/2026" தேசிய இறுதிப் போட்டி கடந்த மே 10ஆம் திகதி கொழும்பு Commercial Credit Training Academy வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. APIIT நிறுவனம் இந்த நிகழ்வை இலங்கையில் தொகுத்து வழங்கியதுடன், இது இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் புத்தாக்கத் திறன்களையும் தொழில்முனைவோர் சிந்தனையையும் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு வழிகாட்டியாக அமைந்தது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்கள் உரையாற்றுகையில், இலங்கையின் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இளம் தொழில்முனைவோரிடமே உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் என்பது வெறும் புத்தாக்கம் மட்டுமல்ல, அது பொறுப்புணர்வுடனும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் விசேட தேவையுடையோரை இலக்காகக் கொண்டு டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்
அதேபோல், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்க அமைப்புகளுக்காக அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் ஆதரவின் மூலம் இளம் தொழில்முனைவோர் இலங்கையிலேயே தமது வணிகங்களை வளர்த்துக்கொள்ள பொருத்தமான சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் போட்டிக்கு அப்பால் சென்று, தமது கருத்துக்களை நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களாக மாற்றியமைக்குமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
"இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம் வெறும் பாரிய நிறுவனங்களில் தங்கியிருக்கவில்லை; தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் கையாளும் இளம் புத்தாக்கவியலாளர்களிடமே தங்கியுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது. மேலும் Hult Prize அறக்கட்டளையின் மூத்த பணிப்பாளர் ஹம்டி பென் எல் எல்மி (Hamdi Ben El Elmi) மற்றும் பிராந்திய முகாமையாளர் சுப்ரியா ஜங்ரே (Supriya Jangre) ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். APIIT தலைவர் பந்துல எகொடகே, Hult Prize தேசிய பணிப்பாளர் தவீரு ஹெட்டியாராச்சி மற்றும் APIIT வணிகக் கல்லூரியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.


