Skip to main content

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியை இணைக்கும் தேசிய திட்டம் ஆரம்பம்

MoT Editor

இலங்கையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி துறைகள் தனித்தனியாக இயங்குவதற்குப் பதிலாக, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் அவற்றை ஒன்றிணைத்து தேசிய போக்குவரத்து அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் மூலோபாய திட்டம் கடந்த (ஆகஸ்ட் 23) ஆம் திகதி Waters Edge வளாகத்தில் "2035 க்கான டிஜிட்டல் மயமாக்கல் மூலம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியை ஒருங்கிணைத்தல்" (Integrated Transport, Highways and Urban Development for Sri Lanka through Digitalization) என்ற கருப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கௌரவ நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன ஆகிய அமைச்சர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. தற்போதைய போக்குவரத்து அமைப்பில் உள்ள அரச நிறுவனங்களுக்கு இடையே டிஜிட்டல் தொடர்பு இன்மையால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்கள் காரணமாக தினசரி பெருமளவு பணமும் நேரமும் வீணடிக்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன சுட்டிக்காட்டினார். இந்நிலையை நிவர்த்தி செய்வதற்காக தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், பல்வேறு போக்குவரத்து முறைகளை தனித்தனியாகத் தேடுவதற்குப் பதிலாக, Open GTFS தரவுகளை வழங்குவதன் மூலம் ஒரே வரைபடத்தின் (Map) மூலம் முழுப் பயணத்தையும் திட்டமிடுவதற்கும், பேருந்து மற்றும் புகையிரதங்களின் நேரடி இருப்பிடத்தை (Live Tracking) பரிசோதிப்பதற்கும் வசதிகள் செய்யப்படும். மேலும், எந்தவொரு வங்கி அட்டை, QR, Wallet அல்லது Transit Card ஐப் பயன்படுத்தி அனைத்துப் போக்குவரத்து முறைகளுக்கும் ஒரே அமைப்பின் கீழ் கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படும். GovPay அமைப்புடன் இணைக்கப்பட்ட புள்ளிகள் குறைக்கும் (Demerit points) மின்னணு சட்ட அமலாக்க முறையை நிறுவுதல், 2027 முதல் திட்டமிடப்பட்டு 2034 ஆம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி பயன்பாட்டுக் கட்டண முறைமை மற்றும் புகையிரத எஞ்சின்களுக்கு GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கொள்ளளவை அதிகரிப்பது குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஒரே வீதியை வருடத்திற்கு பலமுறை புனரமைப்பு செய்வதைத் தடுப்பதற்காக அனைத்துப் பயன்பாட்டு நிறுவனங்களுக்குமான (Utility agencies) பொதுவான கட்டுமானப் பதிவேடு, டிஜிட்டல் கட்டிட அனுமதி மற்றும் போக்குவரத்து மையங்களை அடிப்படையாகக் கொண்ட நகர அபிவிருத்தி ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும். அரச நிறுவனங்கள் தனித்தனியாக அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக தேசிய தரவுப் பரிமாற்ற அமைப்பை (NDX) பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைய வேண்டும் என்றும், ஒவ்வொரு டிஜிட்டல் தரவு அமைப்புக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் (கலாநிதி) அசிரி கருணாவர்தன உட்பட பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

image 01image 02image 03image 05image 04image 06