டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கோவ்டெக் ஸ்ரீலங்கா (GovTech Sri Lanka) நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த "சிறந்த சட்டவாக்கத்திற்கு சிறந்த கருவிகள்" (Better Tools for Better Lawmaking) என்ற கருப்பொருளிலான விசேட பயிலரங்கு 21 சட்ட வரைஞர் திணைக்களத்தில் (LDD) நடைபெற்றது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கெளரவ பொறியியலாளர் இரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில், சட்ட வரைபு தயாரிப்பு செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, முன்மொழியப்பட்டுள்ள மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASP) சட்டமூலத்திற்கு இந்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக, AI தொழில்நுட்பம் மூலம் சட்டங்களை வரைதல், உறுதிப்படுத்துதல் மற்றும் மும்மொழி உற்பத்தி கருவிகளைப் பயன்படுத்துவதன் நடைமுறை சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டி, கோவ்டெக் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் திரு. திரினேஷ் பெர்னாண்டோ, திரு. இஷான் ரசீன் மற்றும் திருமதி சிந்தனி ஏபாஆரச்சி ஆகியோரால் அறிவுப் பகிர்வு அமர்வு நடாத்தப்பட்டது. மேலும் தரவுத் தயார்நிலை, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னோடித் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கோவ்டெக் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, சட்ட வரைஞர் தில்ருக்ஷி சமரவீர உட்பட சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.





